பா.ஜ.க.வை தெரிந்து கொள்ளுங்கள் திட்டம்; நட்டாவுடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் சந்திப்பு


பா.ஜ.க.வை தெரிந்து கொள்ளுங்கள் திட்டம்; நட்டாவுடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் சந்திப்பு
x

பா.ஜ.க.வை தெரிந்து கொள்ளுங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜே.பி. நட்டாவுடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் சந்தித்து பேசுகிறார்.



புதுடெல்லி,


பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த ஆண்டு ஏப்ரலில் அக்கட்சியின் நிறுவன நாளன்று, பா.ஜ.க.வை தெரிந்து கொள்ளுங்கள் என்ற பெயரிலான திட்ட நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியானது, பா.ஜ.க.வின் கடந்த கால வரலாறு, கடந்து வந்த போராட்டங்கள், வெற்றிகள், கொள்கைகள் மற்றும் தேச கட்டமைப்பில் பா.ஜ.க. மற்றும் அக்கட்சியாளும் அரசுகளின் பங்கு ஆகியவை பற்றி விரிவாக பேசப்படும்.

இந்த திட்ட தொடக்கத்தின் வழியே பல்வேறு நாடுகளுக்கும், கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பற்றி தெரிவிக்கப்படுவதுடன், அதன் வழியே இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் நடைபெறும்.

இதன்படி, நாடாளுமன்றவாதிகள், தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கொள்கை நிபுணர்கள் ஆகியோருடன் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சி தலைமையகத்தில் இன்று விரிவாக உரையாட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நட்டாவை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் இன்று மாலை 4 மணியளவில் சந்தித்து பேசுகிறார். இதனை பா.ஜ.க. வெளிநாட்டு விவகார துறை பொறுப்பு அதிகாரியான டாக்டர் விஜய் சவுதவாலா உறுதிப்படுத்தி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் டோனி. 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து உள்ளார்.

டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் உடன், கடந்த ஜனவரி 27-ந்தேதி ஜே.பி. நட்டா கலந்துரையாடி கட்சியின் கொள்கைகள், இயக்கம் மற்றும் பணி உள்ளிட்டவற்றை விளக்கி பேசினார்.


Next Story