சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை


சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
x

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

சிவமொக்கா;

5 வயது சிறுமி பலாத்காரம்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 20). இந்த நிலையில் சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வெங்கடேஷ், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர் பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்யபட்டது தெரியவந்தது.

இதைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மகளை பலாத்காரம் செய்தது வெங்கடேஷ் என்பதும் பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், வெங்கடேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் போலீசார் வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தி நீதிபதி மோகன் தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை பலாத்காரம் செய்த வெங்டேசுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.


Next Story