'கீதா பிரஸ்' புத்தக பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது


கீதா பிரஸ் புத்தக பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது
x

கோப்புப்படம்

‘கீதா பிரஸ்’ புத்தக பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு மரியாதை அளிக்கும்விதமாக, அவரது 125-வது பிறந்தநாள் ஆண்டையொட்டி கடந்த 1995-ம் ஆண்டு காந்தி அமைதி விருதை மத்திய அரசு உருவாக்கியது.

தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் உலகின் எந்த ஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கும் இந்த விருது வழங்கப்படும். இது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம், பட்டயம் மற்றும் விசேஷ கைவினை அல்லது கைத்தறி பொருள் அடங்கியது.

கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள 'கீதா பிரஸ்' பதிப்பகத்துக்கு வழங்குவது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கீதா பிரஸ், உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்றாகும். இந்த பதிப்பகம், 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில், 16 கோடியே 21 லட்சம் பகவத் கீதை புத்தகங்களும் அடக்கம்.

காந்திய கொள்கை அடிப்படையில், சமுதாய கூட்டு மேம்பாட்டுக்காக இந்த பதிப்பகம் ஆற்றிய முக்கியமான, இணையற்ற பங்களிப்புக்காக காந்தி அமைதி விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story