ஆயுதங்களை கைவிடுங்கள் என கூறிய குலாம் நபி ஆசாத்திற்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்


ஆயுதங்களை கைவிடுங்கள் என கூறிய குலாம் நபி ஆசாத்திற்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
x

பயங்கரவாதிகள் ஆயுத கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, பயங்கரவாத குழு ஒன்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதுதொடர்பாக அவர் காஷ்மீர் முழுவதும் பொதுக்கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய குலாம் நபி ஆசாத்,

"துப்பாக்கி கலாச்சாரம் எல்லா தலைமுறையினரையும் பாதித்துள்ளது. இந்த பள்ளத்தாக்கில் இனியும் இளைஞர்கள் இறந்து போவதை பார்க்க நான் விரும்பவில்லை. துப்பாக்கி ஏந்தியுள்ளவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எந்த பிரச்சினைக்கும் துப்பாக்கி தீர்வைத் தராது. அவை அழிவையும் துயரங்களையும் மட்டுமே கொண்டு வரும்.

இந்தப் பள்ளத்தாக்கில் இனியும் ரத்தம் சிந்தப்படுவதையும், இளைஞர்களின் உயிரற்ற உடல்களையும் நான் பார்க்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார். மேலும் " தன்னுடைய சொந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளமுடியாத, தோல்வியைத் தழுவிய ஒரு நாடு, நமது மாநிலத்தையும் நாட்டையும் நரகமாக்கி அழிப்பதில் குறியாக உள்ளது என்று பாகிஸ்தான் மீது மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

பயங்கரவாத குழுக்கள் தங்களின் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர் பாஜகவிற்காக செயல்படும் துரோகியாக மாறிவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ள பயங்கரவாத குழு ஒன்று குலாம் நபி ஆசாத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. பாஜகவின் உத்தரவின் பேரில் செயல்படும் துரோகி என்றும் கூறியுள்ளது.


Next Story