அரசு பள்ளி மாணவர்களின் திறமையை கண்டறிந்து வளர்க்க வேண்டும்; கல்வித்துறை அதிகாரிகளுக்கு, மந்திரி பி.சி.நாகேஸ் உத்தரவு
அரசு பள்ளி மாணவர்களின் திறமையை கண்டறிந்து வளர்க்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு, மந்திரி பி.சி.நாகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
சிவமொக்கா;
ஆலோசனை கூட்டம்
மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், சிவமொக்காவிற்கு நேற்று காலை வந்தார். இதையடுத்து மந்திரி பி.சி.நாகேஸ் தலைைமயில் சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிவமொக்கா மட்டுமின்றி தாவணகெரே, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களின் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது மந்திரி பி.சி.நாகேஸ், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறியதாவது:-
சிறந்த மாணவர்களை...
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து வளர்க்க வேண்டும். இதற்காக மாவட்ட, வட்டார கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
மாதத்தில் இத்தனை நாட்கள் என்று நிர்ணயம் செய்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கல்வி திறனை மேம்படுத்த சிறப்பு வகுப்புகளை இவ்வாண்டு நடத்தியதுபோல் வரும் காலங்களிலும் நடத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி திறமை அதிகரித்தால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.