3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா?; விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு


3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா?; விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு
x

3 பேர் சாவுக்கு மின்தடை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று சட்டசபையில் மாதுசாமி தெரிவித்தார்.

பெங்களூரு:

3 பேர் பலி

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சித்தராமையா பேச்சு

இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பல்லாரி அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 3 பேர் மின் தடையால் ஆக்சிஜன் இன்றி உயிரிழந்தது குறித்து பிரச்சினை கிளப்பினார்.

சித்தராமையா பேசும்போது, "பல்லாரி அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் முல்லா உசேன், சங்கரம்மா, சின்னம்மா உள்பட பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று (நேற்று முன்தினம்) திடீரென மின் தடை ஏற்பட்டதால் அந்த நோயாளரிகள் உயிரிழந்துள்ளனர். அங்கு இருந்த ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. வென்டிலேட்டர் கருவியும் செயல்படவில்லை. இதன் காரணமாக நோயாளிகள் முல்லா உசேன், சங்கரம்மா, சின்னம்மா ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு அந்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மந்திரி மற்றும் பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரி தான் காரணம். இது அரசே செய்த கொலையாகும். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நோயாளிகளுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

காங்கிரசார் ஆக்ரோஷம்

இதற்கு பதிலளித்த சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா, அரசுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தை ஏற்கக்கூடியது அல்ல. பல்லாரி ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் பேசினோம். முல்லா உசேனுக்கு சிறுநீரக கோளாறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருந்தது. அதே போல் சங்கரம்மாவுக்கும் தீராத நோய் இருந்தது. இதனால் அவர்கள் இறந்துள்ளனர். மின் தடையால் அவர்கள் இறக்கவில்லை. அங்கு ஜெனரேட்டர் நல்ல முறையில் செயல்படும் வகையில் தான் உள்ளது" என்றார்.

மந்திரி மாதுசாமியின் கருத்துக்கு சித்தராமையா உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அரசின் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவோம், உங்களை கேட்டு தான் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமா? என்றும் அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். அப்போது பா.ஜனதா உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசினர். இருதரப்பினரும் ஒரே நாளில் குரலை உயர்த்தி பேசியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலுவும் விளக்கம் அளித்தார். மின் தடையால் அவர்கள் இறக்கவில்லை என்று கூறினார். இதை ஏற்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.

விசாரணை நடத்தப்படும்

அதன் பிறகு மீண்டும் பேசிய மாதுசாமி, "பல்லாரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஒருவேளை அந்த ஆஸ்பத்திரியின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுத்து இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.

இதற்கிடையே, பல்லாரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


Next Story