லாரி மீது அரசு பஸ் மோதல்: பெண்கள் உள்பட 5 பேர் பலி
சித்ரதுர்காவில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு-
சித்ரதுர்காவில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி மீது அரசு பஸ் மோதல்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் பெங்களூரு நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. (அரசு) பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் அந்த பஸ், சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா குள்ளஹள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை அரசு பஸ் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
அந்த சமயத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
5 பேர் சாவு
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 18 பேரும் ஆம்புலன்சுகள் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 16 பேர் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 15 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஐமங்களா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா் போலீசார் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் பெங்களூருவை சேர்ந்த சிறுவன் பர்வதம்மா (வயது 53), ராய்ச்சூரை சேர்ந்த மாபம்மா (35), மஸ்கியை சேர்ந்த ரமேஷ் (26), ரவி (23), மான்வியை சேர்ந்த நரசண்ணா (5) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து ஐமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.