டெல்லியில் ரூ.80-க்கு தக்காளி விற்பனை: மத்திய அரசு நடவடிக்கை
டெல்லியில் ரூ.80-க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
அத்தியாவசிய காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் ஹபூரில் நேற்று கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்டது.
எனவே இந்த விலை உயர்வில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வாகனங்களில் சென்று தள்ளுபடி விலையில் தக்காளி விற்கப்படுகிறது.
டெல்லியில் கடந்த 14-ந்தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு மத்திய அரசு விற்பனை செய்தது. இது நேற்று முன்தினம் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மேலும் விலை குறைக்கப்பட்டு ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'நாடு முழுவதும் 500-க்கு மேற்பட்ட இடங்களில் நிலைமையை மறுமதிப்பீடு செய்த பிறகு, இன்று (நேற்று) முதல் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.