புதிய கியாஸ் கொள்கை அடிப்படையில் 10 சதவீதம் குறைந்த இயற்கை எரிவாயு விலை


புதிய கியாஸ் கொள்கை அடிப்படையில் 10 சதவீதம் குறைந்த இயற்கை எரிவாயு விலை
x

கோப்புப்படம்

புதிய கியாஸ் கொள்கை அடிப்படையில் இயற்கை எரிவாயு விலை 10 சதவீதம் குறைந்தது.

புதுடெல்லி,

மரபு சார்ந்த துறைகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் நடத்தப்படும் ஏ.பி.எம். வயல்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் தொடர்பாக கிரிட் பரிக் கமிட்டி வழங்கிய பல முக்கிய பரிந்துரைகளை மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது.

இதில் முக்கியமாக, இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் வினியோகிக்கப்படும் கியாஸ் (பி.என்.ஜி.) விலை 10 சதவீதம் குறையும் என அறிவிக்கப்பட்டது.

மாதந்தோறும் நிர்ணயம்

மேலும் ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்த இந்த எரிவாயு விலை இனிமேல் மாதந்தோறும் என்ற அடிப்படையில் மாற்றியமைக்கப்படும். மாதத்தின் கடைசி நாள் இந்த புதிய விலை அறிவிப்பு வெளியாகும். இந்த எரிவாயு விலை குறைப்பு நுகர்வோருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும்பொருட்டு, இந்த விலைகளை அரசு கண்காணிக்கும்.இந்த முக்கிய முடிவுகள் மேற்படி புதிய கொள்கையில் அடங்கி உள்ளன. இந்த கொள்கையின் அடிப்படையில் இந்த மாதத்தில் மீதமுள்ள நாட்களுக்கான (இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை) சி.என்.ஜி. மற்றும் பி.என்.ஜி.யின் விலையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

2 ஆண்டுகளுக்கு அமல்

அதன்படி இந்த எரிவாயு யூனிட் (மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) ஒன்றுக்கு 7.92 டாலராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.648 ஆகும்.

ஆனால் நுகர்வோருக்கு உச்சபட்ச விலையாக யூனிட் ஒன்றுக்கு 6.5 டாலர் (சுமார் ரூ.532) ஆகவே மத்திய அரசு வரையறுத்து உள்ளது. இது 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் கியாஸ் விலை 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.


Related Tags :
Next Story