டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் பயணிகளை அனுமதிக்க 'டிஜி யாத்ரா' தொழில்நுட்பம் அறிமுகம்


டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் பயணிகளை அனுமதிக்க டிஜி யாத்ரா தொழில்நுட்பம் அறிமுகம்
x

டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய விமான நிலையங்களில் பயணிகளை அனுமதிப்பதற்கு ‘டிஜி யாத்ரா’ என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜி யாத்ரா

விமான நிலையங்களில், பயணிகள் காகித ஆவணங்கள் எதுவும் இன்றி உள்ளே நுழைய பயன்படும்வகையில் 'டிஜி யாத்ரா' என்ற புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு செயலி ஆகும்.

இந்த சேவையை பெற 'டிஜி யாத்ரா' செயலியில் பயணிகள் ஆதார் எண் அடிப்படையில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 'செல்பி' புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போர்டிங் பாசை 'ஸ்கேன்' செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, பயணிகளின் விவரங்கள், விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

முக அடையாளம்

விமான நிலைய இ-கேட்டில், பயணிகள் 'பார்கோடு' ஒட்டப்பட்ட போர்டிங் பாசை 'ஸ்கேன்' செய்ய வேண்டும். இ-கேட்டில் பொருத்தப்பட்டுள்ள முகத்தை அடையாளம் கண்டு உறுதி செய்யும் தொழில்நுட்பம், பயணியின் அடையாளத்தையும், பயண ஆவணங்களின் அடையாளத்தையும் உறுதி செய்யும். இந்த நடைமுறை முடிந்த பிறகு, பயணிகள் இ-கேட் வழியாக விமான நிலையத்துக்குள் நுழையலாம்.

பாதுகாப்பு சோதனை பகுதி உள்பட எல்லா சோதனை பகுதிகளையும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தால் பயணிகள் கடந்து செல்லலாம். இறுதியில், விமானத்தில் ஏறலாம்.

ஜோதிர்ஆதித்ய சிந்தியா

இந்த 'டிஜி யாத்ரா' முறையை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.

பயணிகள் விவரங்களின் தனியுரிமை பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:-

பயணிகளின் விவரங்கள் டிஜி யாத்ராவில் ரகசியமாக பாதுகாக்கப்படும். 'பிளாக் செயின்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள், பயணிகளின் செல்போன்களில் சேமிக்கப்படும். விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்கள், பயணம் முடிந்த 24 மணி நேரத்தில் தானாக அழிந்து விடும்.

பெங்களூரு, வாரணாசி ஆகிய விமான நிலையங்களிலும் இந்த தொழில்நுட்பம் அமலுக்கு வந்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு மட்டும் இது அமல்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு உறுதி

அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதத்துக்குள், ஐதராபாத், புனே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும். பிறகு மற்ற விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானம் ஏறும் நடைமுறையை விரைவாகவும், தடையின்றியும் மேற்கொள்ள 'டிஜி யாத்ரா' கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிறுவன புறப்பாட்டு கட்டுப்பாட்டு அறையால் பயணிகளின் விவரங்கள் உறுதி செய்யப்படுகிறது. அத்தகைய பயணிகள் மட்டுமே முனையத்துக்குள் நுழைய முடியும் என்பதால், விமான நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.


Next Story