எனது மகனின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது; டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா பேட்டி
பெண் அதிகாரிகள் மோதல் விவகாரத்தில் எனது மகனின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெண் அதிகாரிகள் மோதல் விவகாரத்தில் எனது மகனின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா கூறியுள்ளார்.
மன நலம் பாதித்தவர்
கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சிந்தூரிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவரது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியுடன் ரோகிணி சிந்தூரி செல்போனில் தொடர்பில் இருந்ததாகவும், அவரது நடவடிக்கை குறித்தும் ரூபா மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ரோகிணி சிந்தூரி, அவர் ஒரு மன நலம் பாதித்தவர் என்று பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக அரசு துறையில் உயர்மட்ட பெண் அதிகாரிகள் 2 பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருப்பது அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்மா மெதுவாக திரும்ப தாக்கும்
இந்த விவகாரம் குறித்து மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கர்மா மெதுவாக திரும்ப வந்து தாக்கும். அது விரைவாகவோ அல்லது மெதுவாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அது வரும்" என்று ரோகிணி சிந்தூரியை மறைமுகமாக தாக்கி இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
இதுவும் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
யாரும் பயன்படுத்தக்கூடாது
இந்த நிலையில் டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா, தனது மகனின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனது மகன் டி.கே.ரவி இறந்து 8 ஆண்டுகள் ஆகிறது. அந்த வலி, வேதனை என்னை விட்டு இன்னும் போகவில்லை. என்னை ரோகிணி சிந்தூரியோ அல்லது ரூபாவோ அல்லது வேறு யாரோ வந்து பார்க்கவில்லை. அதனால் எனது மகனின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது" என்றார்.