கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மனைவி தற்கொலை; குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மனைவி தற்கொலை; குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் கொலையை தொடர்ந்து அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உப்பள்ளி;

கொலை வழக்கு

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த ராயநாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் பண்டாரி. இவர் அதே கிராம பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பண்டாரி(வயது 28). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதி வெளியே சென்று வீடு திரும்பிய இவரை உப்பள்ளி மெயின் ரோட்டில் வைத்து 8 பேர் கும்பல் கத்தியால குத்தி கொலை செய்தது.

இதுகுறித்து தீபக்கின் சகோதரர் சஞ்சய், உப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்யாமல் இருப்பதாக புஷ்பா தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

சி.ஐ.டி விசாரணை

மேலும் புஷ்பா மற்றும் தீபக்கின் சகோதரர் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி தீபக் கொலை வழக்கு குறித்து சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. தற்போது சி.ஐ.டி போலீசார் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் புஷ்பா முக்கிய சாட்சி என்பதால் அவரிடம் ஏற்கனவே ஒருமுறை சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். 2-வது கட்டமாக நேற்று முன்தினம் சி.ஐ.டி. விசாரணைக்கு அவர் ஆஜரானார்.

தூக்கிட்டு தற்கொலை

இந்த விசாரணை முடிந்த மறுநாளான நேற்று முன்தினம் இரவு திடீரென்று நவநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் புஷ்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நவநகர் போலீசார் சென்று புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நவநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பிரகாஷ் என்பவர் புஷ்பாவை சந்தித்து இந்த வழக்கை திரும்ப பெறும்படி மிரட்டியதாக கூறப்பட்டது. இந்த மிரட்டல் தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தீபக்கின் சகோதரர் சஞ்சய், பிரகாஷ் மிரட்டியது உண்மைதான் என்று கூறினார். மேலும் இது குறித்து அவர் வித்யாநகர் போலீசில் பிரகாஷ் மீது புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புஷ்பா தற்கொலை செய்து கொண்டிருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 பேர் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் நேற்று புஷ்பாவின் தந்தை பசப்பா, நவநகர் போலீசில் தனது மகள் தற்கொலைக்கு தீபக்கின் குடும்பத்தினர்தான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். அதில் தீபக்கின் குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய், ரேணுகா, சகுந்தலா, சிவாஜி ஆகியோர், புஷ்பாவை திட்டியுள்ளனர்.

இதனால் மனம்உடைந்த புஷ்பா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் நவநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story