குஜராத் பால விபத்து: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வு கூட்டம்
குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் இன்று நடந்துள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
ஆனால், 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று மாலை இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
இந்த துயர சம்பவத்திற்கு ரஷியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் சார்பில் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கெவாடியா நகரின் ஏக்தா நகர் பகுதியில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசும்போது, மோர்பி பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு எதுவும் இல்லை என கூறினார்.
குஜராத் அரசு நேற்றைய தினத்தில் இருந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சம்பவம் பற்றி விசாரிக்க குஜராத் அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது.
ஒரு புறம் வேதனையுடன் கூடிய மனதுடன் இருந்தபோதும், மறுபுறம் கடமையை செய்வதற்கான பாதை காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடந்துள்ளது.
இந்த கூட்டத்தில் சம்பவம் நடந்தது முதல் இதுவரை, மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி பிரதமர் மோடியிடம் விளக்கி கூறப்பட்டன. இந்த சோக சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விசயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பாய் பட்டேல், உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்கவி, தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. மற்றும் பிற அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.