வினாத்தாள் கசிந்ததால் குஜராத்தில் அரசுபணிக்கான எழுத்து தேர்வு ரத்து..!!


வினாத்தாள் கசிந்ததால் குஜராத்தில் அரசுபணிக்கான எழுத்து தேர்வு ரத்து..!!
x

கோப்புப்படம்

வினாத்தாள் கசிந்ததால் குஜராத்தில் அரசுபணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆமதாபாத்,

குஜராத் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் 1,181 கிளார்க் பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக 9½ லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது நேற்று அதிகாலையில் தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் வினாத்தாள் நகலுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தேர்வை மாநில அரசு ரத்து செய்தது. இந்த தேர்வு அடுத்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும் என பஞ்சாயத்து துறை மேம்பாட்டு கமிஷனர் சந்தீப் குமார் தெரிவித்தார். அதேநேரம் தொலைதூரங்களில் இருந்து தேர்வுக்காக மையங்களுக்கு வந்திருந்த தேர்வர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பல இடங்களில் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இந்த வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் வதோதராவில் இருந்து 15 பேரை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story