குருபூர்ணிமா: மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பால் தாக்கரேவுக்கு மலரஞ்சலி


குருபூர்ணிமா:  மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பால் தாக்கரேவுக்கு மலரஞ்சலி
x

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குருபூர்ணிமாவை முன்னிட்டு, மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தினார்.



மும்பை,



மராட்டியத்தில் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பியது கடந்த மாதத்தில் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.

இதன்பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, தங்களது சிவசேனா அணி முழு அளவில் ஆதரவு அளிக்கும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று கூறினார்.

இதுபற்றி ஷிண்டே கூறும்போது, ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம். பிரதமர் மோடி வழிகாட்டுதலின் கீழ் எங்களுடைய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முர்முவுக்கு வாக்களித்திடுவார்கள் என கூறினார்.

இந்நிலையில், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குருபூர்ணிமாவை முன்னிட்டு, மும்பையில் உள்ள மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவிடத்திற்கு சென்று இன்று மலரஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறும்போது, அவருடைய ஆசிகளாலேயே நான் இப்போது உங்கள் முன்னால் முதல்-மந்திரியாக நிற்கிறேன். என்னை போன்ற சாதாரண நபர் கூட மராட்டியத்தின் உயர் பதவிக்கு வர முடியும் என்றால் அது பால் தாக்கரேவின் ஆசிகளாலேயே நடக்கும் என கூறியுள்ளார்.

எனது அரசு மராட்டியம் முழுவதற்கும் உரிய வளர்ச்சிக்காகவே பாடுபடும். மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டு உள்ள சூழ்நிலையை கண்காணித்து வருவதுடன், நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதன்பின்னர் மறைந்த சிவசேனா தலைவர் மற்றும் அவரது குருவான ஆனந்த் திகேவுக்கு அஞ்சலி செலுத்த ஷிண்டே, தானே நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.


Next Story