ஞானவாபி மசூதி விவகாரம்: இந்து அமைப்பின் கோரிக்கை மனு தள்ளுபடி
ஞானவாபி மத வழிபாட்டு தலத்தில் கார்பன் பரிசோதனை நடத்த கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
லக்னோ,
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது.
இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. கடந்த மே மாதம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது.
அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி கோர்ட்டு தடை விதித்தது.
ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கை வாரணாசி சிவில் கோர்ட்டில் இருந்து அனுபவம் பெற்ற நீதிபதி உள்ள வாரணாசி மாவட்ட கோர்ட்டிற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் உள்ள இந்து மத கடவுள் சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை வாரணாசி மாவட்ட கோர்ட்டு மூத்த நீதிபதி முன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
ஞானவாபி இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் முதலில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பின்னர் ஞானவாபி மசூதியில் இந்து மத கடவுள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த சிவலிங்கத்தின் உண்மை வயதை கண்டறிய கார்பன் பரிசோதனை நடத்த வேண்டும் என்று மனுதாரர்களில் 4 பேர் வாரணாசி கோர்ட்டில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். இந்திய தொல்லியல் துறை மூலம் சிவலிங்கத்தின் உண்மை வயதை கண்டறிய அறிவியல் முறையிலான கார்பன் பரிசோதனை நடத்த வேண்டுமென பெண்கள் 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், 1991-ம் ஆண்டு சட்டத்தின்படி மத வழிபாட்டு தலங்களின் நிலை 1947 ஆகஸ்ட் 15-க்கு பின் இருந்தவாறு தொடர வேண்டும் என ஞானவாபி மசூதி அமைப்பு சார்பில் தொடர்ந்த மேல்முறையிட்டு மனுவை வாரணாசி மாவட்ட நீதிபதி கடந்த மாதம் 12-ம் தேதி தள்ளுபடி செய்தார். அதில், மனுதாரர்கள் அந்த இடத்திற்கு உரிமைகோரவில்லை, அந்த இடத்தில் வழிபாடு நடத்த உரிமைகோருகின்றனர் என தெரிவித்த நீதிபதி மசூதி அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து மதகடவுள் சிவலிங்கத்தின் உண்மை வயதை கார்பன் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு கடந்த 7-ந் தேதி வாரணாசி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் முதலில் தொடரப்பட்ட வழக்குடன் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்குடன் இணைத்துக்கொள்ளலாமா? இதில், அறிவியல் ரீதியிலான விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட முடியுமா? என்று மேலும் தெளிவுபடுத்துமாறு 4 பெண் மனுதாரர்களிடம் கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், கார்பன் பரிசோதனை தொடர்பான மனு நீதிபதி ஏ.கே.விசேஷா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, கார்பன் பரிசோதனை குறித்த மனு மீதான கருத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய ஞானவாபி மசூதியை நிர்வகித்து வரும் இஸ்லாமிய அமைப்பிற்கு உத்தரவிட்டார்.
அதன்பின், இந்து மதகடவுள் சிவலிங்கத்தின் உண்மை வயதை கண்டறிய கார்பன் பரிசோதனை நடத்த கோரிய இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.