75-வது சுதந்திர தினம்: 10 நாட்களில் 1 கோடி தேசியக் கொடிகள் விற்பனை - மத்திய அரசு
10 நாட்களில் சுமார் 1 கோடி தேசிய கொடிகளை 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். மேலும், 75-வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பைத் தொடர்ந்து தேசியக் கொடிகளைப் பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தியத் தபால் துறை சார்பிலும் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியத் தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"தபால் துறை அதன் 1.5 லட்சம் அலுவலகங்களின் நெட்வோர்க் மூலம் ஒவ்வொரு குடிமகனிடம் தேசியக் கொடிகளைக் கொண்டு சேர்கிறது. வெறும் 10 நாட்களுக்குள், ஆன்லைன் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இந்தியத் தபால் துறை 1 கோடிக்கும் அதிகமான தேசிய விற்பனையைச் செய்துள்ளது. இந்த கொடிகள் ₹ 25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நாடு முழுவதும் இலவசமாகத் தேசியக் கொடிகளை டெலிவரி செய்கிறோம்.
ஆன்லைன் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் பொதுமக்களுக்குத் தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு. இதற்கு எங்கள் 4.2 லட்சம் தபால் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.