நாளை சுதந்திர தினம்: சமூக வலைத்தள முகப்பு படங்களில் "தேசிய கொடி" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக கடந்த மாத இறுதியில் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வீடுகள் தோறும் தேசிய கொடி' என்ற இயக்கத்தின் கீழ் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அத்துடன் 'என் மண், என் தேசம்' என்ற இயக்கத்தின் கீழ் அவரவர் பகுதியில் தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி 'செல்பி' படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொண்டார்.
முகப்பு படத்தை மாற்றிய மோடி
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றியுள்ளார்.
மேலும் 'வீடுகள் தோறும் தேசிய கொடி' இயக்கத்தின் ஒரு பகுதியாக மக்களும் தங்களது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "வீடுகள் தோறும் தேசிய கொடி இயக்கத்தின் உணர்வோடு, நமது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டுக்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.