பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது- ஹர்பஜன்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு


பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது- ஹர்பஜன்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு
x

Image Courtesy: PTI 

பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக ஹர்பஜன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான ஹர்பஜன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த பத்து நாட்களாக, பஞ்சாபில் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் மற்றும் பல பங்குதாரர்களிடமிருந்து, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக புகார் வந்துள்ளது. இது நேர்மையாக ஒளிவு மறைவு இல்லாமல் நடைபெறும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிரானதாகும்.

150 உறுப்பினர்களை வாக்களிக்கும் உரிமையோடு சங்கத்தில் சேர்க்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முயற்சித்து வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் நடைபெறும். இதனை பொதுக்குழுவின் சம்மதம் ஏதுமில்லாமல், சங்க நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்த செயல் பிசிசிஐயின் சட்டங்கள், வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு முரண்பாடாக நடக்கிறது. தங்களுடைய மோசடிகளை மறைப்பதற்காக, முறையான சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை நிர்வாகிகள் கூட்டவில்லை, தன்னிச்சையாக சிலரின் சுயநலத்திற்காக சங்கம் இயங்கி வருகிறது.

இவ்வாறு ஹர்பஜன் சிங் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்-கின் இந்த கடிதத்தால் பஞ்சாப் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.


Next Story