அரியானா: ஆய்வுக்கு சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கல் வீசி தாக்குதல்; சுரங்க மாபியா கும்பல் வெறிச்செயல்!
அரியானா சுரங்க மாபியா தொடர்ச்சியாக காவல்துறை, அரசு அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் சுரங்க மாபியா கொள்ளை கும்பல் தொடர்ச்சியாக காவல்துறைக்கு எதிராகவும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன், சுரங்க கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ் டிஎஸ்பி ஒருவர் மீது சட்டவிரோத சுரங்க மாபியா பட்டப்பகலில் லாரியை ஏற்றி படுகொலை செய்தனர். போலீஸ் டிஎஸ்பி கொல்லப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை சட்டவிரோத சுரங்க பணிகளை முடக்க முழுவீச்சில் கடுமையாக இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மலைகளில் சட்டவிரோத சுரங்கங்களைத் தடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்பு, டஜன் கணக்கான கிராமங்களை டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
இந்த நிலையில், நேற்று படேட் கிராமத்தில் மலையை ஆய்வு செய்யச் சென்ற புன்ஹானா போலீஸார், உள்ளூர் சுரங்கத் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆணையத்தின் (ஆர்டிஏ) கூட்டுக் குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சுரங்க மாபியாவின் கல் வீச்சு மற்றும் இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் போலீசார் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீசாரும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதில் சுரங்க மாபியா தப்பியோடினர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து மூன்று பாப்லாண்ட் இயந்திரங்கள் (மலையில் கல் உடைக்கும் இயந்திரம்) உள்ளிட்ட வெடிபொருட்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 5 பேர் உள்பட 50 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவத்தின் தீவிரத்தை கண்ட போலீஸ் கேப்டன் வருண் சிங்லா, பலத்த போலீஸ் படையுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
இந்த் சம்பவம் குறித்து, நுஹ் சரக போலீஸ் ஏசிபி உஷா கூறியதாவது, மலைகளை உடைத்துக்கொண்டிருந்த இயந்திர ஆபரேட்டரிடம் இயந்திரத்தை நிறுத்தச் சொன்னபோது, ஆபரேட்டர் கான்ஸ்டபிள் தரம்பாலைக் கொல்லும் நோக்கத்தில் அவரை போப்லேண்ட் இயந்திரத்தை வைத்து தலையில் தாக்கினார். இதைத் தொடர்ந்து, போலீஸ் தரம்பால் மலையில் இருந்து கீழே குதித்து தனது உயிரைக் காப்பாற்றினார். போலீஸ்காரர் குதிக்காமல் இருந்திருந்தால் அவரது தலை துண்டிக்கப்பட்டிருக்கும். மேலும் கொள்ளை கும்பல், போலீசை சுற்றி வளைத்து, அந்த இடத்திலேயே கற்களை வீசினர், பின்னர் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கலைத்தனர்.விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.