அரியானா வன்முறை; சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்ப முடியாது - முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார்


அரியானா வன்முறை; சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்ப முடியாது - முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார்
x
தினத்தந்தி 2 Aug 2023 4:09 PM IST (Updated: 2 Aug 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

புதுடெல்லி,

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துணை நிலை ராணுவத்தினரும், அதிரடிப்படையினரும் முக்கிய இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கை எதுவும் நடைபெறாமல் இருக்க 20 துணை ராணுவ படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story