பிரதமராகும் நோக்கங்கள் எதுவும் தனக்கு இல்லை: நிதீஷ் குமார் பேச்சு
பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் தனக்கு பிரதம மந்திரியாகும் நோக்கங்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
பாட்னா,
பீகார் சட்டசபையில் 2 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பேசிய முதல்-மந்திரி நிதீஷ் குமார், கூட்டணியில் இருந்து (பா.ஜ.க.) நான் வெளியேறியதற்கு காரணம், நான் ஏதோ ஒன்றாக (பிரதமர்) விரும்புகிறேன் என சிலர் கூறினார்கள். நான் எதுவாகவும் வர விரும்பவில்லை என அவர்களுக்கு கூறி கொள்கிறேன் என பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, 2020-ம் ஆண்டு தேர்தலின்போதே, நான் முதல்-மந்திரியாக தயாராக இல்லை. நான் உங்களிடம் (பா.ஜ.க.), நீங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்களது கட்சியில் இருந்தே ஒருவர் முதல்-மந்திரியாக வேண்டும் என கூறினேன்.
ஆனால், நான் முதல்-மந்திரியாக இருக்க என் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. கடைசியில் அதற்கு நான் தயாரானேன். ஆனால், எனது கட்சியில் அடிமட்டத்தில் இருந்து ஒருவரை மேலே கொண்டு வந்தேன்.
கட்சியின் தேசிய தலைவர் பதவியில் நான் இருந்தேன். எனினும், அந்த பதவியில் அவரை நியமித்தேன். கட்சி உறுப்பினர்கள் சிலர், ஏதோ தவறான சில விசயங்கள் நடக்கின்றன என என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் அதனை கவனிக்கவில்லை என பேசியுள்ளார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் உறுப்பினராக இருந்த ஆர்.சி.பி. சிங் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் அதற்கு மறுப்பு கூறினார். அவரை கட்சியில் உயர்மட்டத்திற்கு கொண்டு வர உதவிய விசயங்களையே நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
அதற்கு முன், பீகார் சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.
நிதிஷ் குமார் அவையில், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகையை அவர்கள் (பா.ஜ.க.வினர்) கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். மத்திய அரசின் பணிகளையே அதில் ஒவ்வொருவரும் விவாதித்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.