"சிறையில் உள்ள என்னை மன ரீதியாக கொடுமை படுத்துகிறார்கள்" - டெல்லி துணைநிலை கவர்னருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்


சிறையில் உள்ள என்னை மன ரீதியாக கொடுமை படுத்துகிறார்கள் - டெல்லி துணைநிலை கவர்னருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்
x
தினத்தந்தி 14 Nov 2023 7:01 AM GMT (Updated: 14 Nov 2023 7:09 AM GMT)

டெல்லி அரசின் நெருக்கடி இல்லாத வேறு ஒரு சிறைக்கு தன்னை மாற்ற வேண்டுமென்று சுகேஷ் சந்திரசேகர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்தது, அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அடிக்கடி கடிதங்கள் எழுதி வருகிறார்.

இந்த நிலையில், சிறையில் தன்னை கொல்ல சதி இருப்பதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி துணைநிலை கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "சிறையில் உள்ள என்னை மன ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயினும் சிறை அதிகாரிகள் மூலம் சித்ரவதை செய்கின்றனர்.

என்னிடம் இருக்கும் பென்டிரைவ் மற்றும் டேட்டாக்களை சிறை அதிகாரியிடம் கொடுக்கும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். சொல்வதை கேட்காவிட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு அடிபணியாவிட்டால் விஷம்வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கின்றனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ-யிடம் புகார் கொடுத்திருக்கிறேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கைக்கு அடிபணியாத காரணத்தால் என்னை 13-வது சிறைக்கு மாற்றிவிட்டனர். அதன் அருகில்தான் டெல்லியில் மந்திரியாக இருந்த சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டிருக்கிறார். எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி அரசின் நெருக்கடி இல்லாத வேறு ஒரு சிறைக்கு என்னை மாற்ற வேண்டும்" இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story