உடல்நலம் தேறி வருகிறார்... பின்னணி இசையுடன் வீடியோ வெளியிட்ட சத்குரு


உடல்நலம் தேறி வருகிறார்... பின்னணி இசையுடன் வீடியோ வெளியிட்ட சத்குரு
x

சிகிச்சைக்கு பின் குணமடைந்து வரும் சத்குரு செய்தித்தாள் ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

புதுடெல்லி,

கோவை ஈஷா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில், ஈஷா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். இதில், பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்பின்னர், அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதும் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடைய மூளையில் நிறைய ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 17-ந்தேதி அவருக்கு அவசரகால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய உடல்நலம் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் விசாரித்து அறிந்தனர்.

இந்நிலையில், சத்குரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் குணமடைந்து வரும் சத்குரு செய்தித்தாள் ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவருடைய வலது கையில் டிரிப்ஸ் ஏற்றியதற்கான சிகிச்சை முறைகள் செய்யப்பட்டு உள்ளன.

அவருடைய வலதுபுற தலையில் அறுவை சிகிச்சைக்கு பின்பு, கட்டு போட்டபடி காணப்படுகிறார். அவர் மருத்துவமனையின் படுக்கையில் எழுந்து அமர்ந்தபடி, செய்தித்தாளின் பக்கங்களை புரட்டி செய்திகளை படிக்கிறார். விரைவில் குணமடையவும் என்ற ஹேஷ்டேக்குடன் 19 விநாடிகள் ஓட கூடிய இந்த வீடியோவில் பின்னணி இசையும் கேட்கிறது.

சத்குருவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் வினித் சூரி கூறும்போது, சத்குரு உடல்நலம் தேறி வருகிறார். அவருடைய உடல் மற்றும் முக்கிய பாகங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றன என்று கூறியுள்ளார்.


Next Story