யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை


யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை
x
தினத்தந்தி 15 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 7:48 AM GMT)

என்னுடைய வாழ்க்கையில் யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை என்றும், அதற்கான அவசியமும் எனக்கு இல்லை என்றும் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சமரச அரசியல் இல்லை

பா.ஜனதா தலைவர்கள் காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். நான் பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் கிடைத்த அதிகாரத்தை மக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் யாருடனும் சமசர அரசியல் செய்து கொண்டதில்லை. அதற்கான அவசியமும், சூழ்நிலையும் எனக்கு இல்லை.

யாருக்கு தேவையோ, அவர்களே சமரச அரசியல் செய்து கொள்கிறார்கள். எனக்கு அதுபோன்ற நிலைமை இதற்கு முன்பும் வந்ததில்லை, தற்போதும் இல்லை. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த விவகாரத்தில் பிரதாப் சிம்ஹாவுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் மேலோட்டமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

சித்தராமையா மீது 5 வழக்குகள்...

நான் முதல்-மந்திரியாக இருந்த போது ஊழல் தடுப்பு படையில் பதிவான 65 வழக்குகளை லோக் அயுக்தாவுக்கு மாற்றி இருந்தேன். எதிர்க்கட்சி தலைவர்களுடனும் சரி, எதிர்க்கட்சிகளுடனும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சமரச அரசியல் செய்து கொண்டது கிடையாது. அரசியல் வேறு, சொந்த விவகாரங்கள் வேறு. இவை இரண்டையும் ஒரு கண்ணில் பார்ப்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.

நான் முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா மீதான 5 வழக்குகள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தாவுக்கு சிபாரிசு செய்திருந்தேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக சமரசம் செய்து கொண்டதில்லை. ஒவ்வொருவரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் எதற்காக பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story