டெல்லியில் கனமழை: ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய 200 கார்கள்


டெல்லியில் கனமழை: ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய 200 கார்கள்
x

Image Courtesy : ANI

கார் நிறுவன வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் சமீப நாட்களாக பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லி அருகே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மற்றும் நொய்டா பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்தப்பகுதியில் யமுனையின் துணை ஆறான ஹிண்டன் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் கடந்த 2 நாட்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஹிண்டன் ஆறு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி நொய்டா பகுதியில் யமுனையில் இணைகிறது. இதனால்தான் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நொய்டா பகுதிகளை பாதித்துள்ளது. இந்தப்பெருவெள்ளம் நொய்டா ஈகோடெக் பகுதி-3 அருகே உள்ள ஒரு கார் நிறுவன வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இந்த காட்சிகள் நேற்று வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக 2 நாட்களுக்கு முன்பு 2 சிறுவர்கள் ஹிண்டன் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். வெள்ள பாதிப்புகளை குறைக்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story