மும்பையில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் பலி


மும்பையில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் பலி
x

மும்பை அருகே ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 4 பேர் பலியானார்கள்.

மும்பை,

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) மும்பை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் வயல்கள் மற்றும் துரப்பன நிலையங்களை அமைத்துள்ளது. இந்த இடங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து செல்லும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

மும்பையில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் 'சாகர் கிரண் ரிக்' என்ற எண்ணெய் துரப்பன நிலையத்திற்கு இன்று ஊழியர்களை ஒரு ஹெலிகாப்டர் அழைத்து சென்றது. இதில் 2 பைலட்டுகள், 7 ஊழியர்கள் இருந்தனர். காலை 11.45 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன நிலையத்தை நெருங்கியது. அடுத்த 4 முதல் 5 நிமிடத்திற்குள் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன நிலைய தளத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில், திடீரென கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் துரப்பன நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அதிவேக மீட்பு படகை அனுப்பியது. மேலும் கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவற்றிற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தன. படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் 9 பேரும் மீட்கப்பட்டனர்.

இவர்களில் 4 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, 4 பேரும் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள். மற்றொருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியர் என்று தெரியவந்தது.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், அதில் பொருத்தப்பட்ட மிதவைகள் மூலம் மிதந்துள்ளது. ஆனால் அது திடீரென கடலில் கவிழ்ந்தபோது, அதில் இருந்தவர்கள் கடல் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் சீரற்ற வானிலை காரணமாக அது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மைல்ஸ் ஸ்டோன் ஏவியேசன் குழுமத்திற்கு சொந்தமானது. இதை மத்திய அரசுக்கு சொந்தமான பவான் ஹன்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்காக வாடகைக்கு அமர்த்தி இருந்தது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story