கர்நாடகத்தில் கழிவறை இல்லாத பள்ளிகள் குறித்து 3 மாதத்தில் அறிக்கை; அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


கர்நாடகத்தில் கழிவறை இல்லாத பள்ளிகள் குறித்து 3 மாதத்தில் அறிக்கை; அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

கர்நாடகத்தில் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகள் குறித்து 3 மாதத்தில் அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகள் குறித்து 3 மாதத்தில் அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெற்றோர் எப்படி அனுப்புவார்கள்?

கர்நாடகத்தில் பள்ளி இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாநிலத்தில் 38 பள்ளிகளில் மட்டுமே கழிவறை வசதிகள் இல்லை என்று கூறினார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையும் நீதிபதிகள் முன்பு அரசு வக்கீல் தாக்கல் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றால், தங்களது குழந்தைகளை பெற்றோர் எப்படி பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

3 மாதத்தில் அறிக்கை

மேலும் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு அரசு அதிகாரிகள் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க அனுப்புவார்களா?. அரசு பள்ளிகளில் கழிவறை வசதிகள் இருந்தாலும், அது முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சில பள்ளிகளில் கழிவறை கதவுகள் மட்டுமே இருக்கிறது. தண்ணீர் வசதி இருப்பதில்லை. இதுபோன்ற அரசு பள்ளிகளில் கழிவறைகள் இல்லாமலும், அங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதன் மூலமும் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பற்றி பெற்றோர் எப்படி சிந்திக்க முடியும்.

மாநிலத்தில் உள்ள கழிவறை இல்லாத பள்ளிகள், கழிவறை இருந்தும் முறையாக பராமரிக்காமல் இருக்கும் பள்ளிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி இன்னும் 3 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Next Story