ஒரே வீட்டில் வசித்தாலும் தம்பதிக்கு விவாகரத்து கொடுக்க மறுக்க கூடாது; கர்நாடக ஐகோர்ட்டு கருத்து


ஒரே வீட்டில் வசித்தாலும் தம்பதிக்கு விவாகரத்து கொடுக்க மறுக்க கூடாது; கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒரே வீட்டில் வசித்தாலும் தம்பதிக்கு விவாகரத்து கொடுக்க மறுக்க கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கு விவாகரத்து கேட்டு பெங்களூரு குடும்பநல கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட்டு, விவாகரத்து கோரும் தம்பதி ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். எனவே விவாகரத்து வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தம்பதி, பெங்களூருவில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பொதுவாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படும் போது சண்டையிட்டு கொள்வது வழக்கம். குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விவகாரத்து கோரி விண்ணப்பித்தாலும், இருவரும் ஒரே வீட்டில் வசிப்பது என்பது அவர்களின் நாகரிகத்தை காட்டுவதாக உள்ளது. எனவே ஒரே வீட்டில் வசிப்பதை காரணம் காட்டி தம்பதிக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து கொடுக்க மறுப்பது ஏற்புடையதல்ல.

எனவே தம்பதியின் வழக்கு பற்றி மீண்டும் விசாரணை நடத்தி, விரைவில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க குடும்பநல கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிற 23-ந்தேதி விவாகரத்து கோரிய தம்பதி குடும்பல நல கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story