தேசிய ஒற்றுமைக்கு இந்தி மொழி மிகவும் முக்கியம்- மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
ஒட்டுமொத்த தேசத்தையும் இந்தி மொழி ஒன்றிணைப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய அளவில் இந்தி மொழியை பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உட்பட பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அவர்களை தொடர்ந்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி குறித்து மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கூறியிருப்பதாவது:
பல பேச்சுவழக்குகளை உள்ளடக்கிய இந்தி மொழி, இந்தியாவை ஒருமைப்பாட்டுடன் பிணைப்பதில் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இன்று உலகின் பல மொழிகளில் இந்தி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நமது தாய்மொழியுடன் சேர்த்து இந்தி மொழியையும் உயர்த்துவதற்கு உறுதிமொழி எடுப்போம்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, தேசிய நடைமுறையில் இந்தியைப் பயன்படுத்துவது முற்றிலும் அவசியம் என்று நமது அரசியலமைப்பு உருவாக்குபவர்கள் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தனர்.
நாட்டின் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம், ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைப்பதில் இந்தி மொழி முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.