மாற்று மதத்தை சேர்ந்த தோழியை பைக்கில் அழைத்து சென்ற இளைஞர் மீது சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
மாற்று மதத்தை சேர்ந்த கல்லூரி தோழியை பைக்கில் அழைத்து சென்ற இளைஞர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிர்பஹூரி பகுதியை சேர்ந்தவர் சாகர் குமார் மிஸ்ரா. கல்லூரி மாணவரான இவர் தன்னுடன் ஒரே வகுப்பில் பயின்றுவரும் தோழியுடன் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த மிஸ்ரா இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கல்லூரி தோழியுடன் பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் வசித்து வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலர் பைக்கில் சென்ற இருவரையும் இடைமறித்துள்ளனர். அப்போது, இருவரும் வேவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த அந்த கும்பல் பைக்கில் இருந்த அந்த பெண்ணை மிரட்டி வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளனர்.
அந்த கும்பலின் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அந்த கும்பல் மிஸ்ராவை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.