'இந்திய வரலாற்றில் மற்றொரு மைல் கல்' : போர்க்கப்பலில் இரவில் விமானம் தரை இறங்கி அசத்தல்


இந்திய வரலாற்றில் மற்றொரு மைல் கல் : போர்க்கப்பலில் இரவில் விமானம் தரை இறங்கி அசத்தல்
x

இந்தியாவில் ஐ.என்.எஸ்.விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், முதல் முறையாக போர் விமானம் இரவில் தரை இறங்கி அசத்தி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல், முதன்முதலாக முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டுள்ள விமானம்தாங்கி போர்க்கப்பல் ஆகும்.

ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்தப் போர்க்கப்பல் அரபிக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலில் முதல்முறையாக 'மிக்-29 கே' போர் விமானம், இரவு நேரத்தில் தரை இறங்கும் சோதனை வெற்றிகரமாக நடந்தேறி இருக்கிறது. இது அபூர்வ சாதனையாக பார்க்கப்படுகிறது.

ராணுவ மந்திரி பாராட்டு

இதுபற்றி இந்திய கடற்படை கூறும்போது, "இரவு நேரத்தில் விமானம் தாங்கி போர்க்கப்பலில் போர் விமானம் தரை இறங்குவது சவாலானது ஆகும். இது ஐ.என்.எஸ். விக்ராந்தின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமை மற்றும் தொழில்நேர்த்தி ஆகியவற்றை நிரூபித்துள்ளது" என தெரிவித்தது.

இந்த சாதனைக்காக இந்திய கடற்படைக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில் மிக்-29 கே போர் விமானத்தை முதல்முறையாக தரையிறக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்திய கடற்படைக்கு பாராட்டுக்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த அசத்தல் சாதனை, விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் சிப்பந்திகள், கடற்படை விமானிகளின் திறன்கள், விடாமுயற்சி, தொழில் நேர்த்தி ஆகியவற்றுக்கு சான்றாக அமைந்துள்ளது. அவர்களுக்கு பாராட்டுகள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் மற்றொரு மைல்கல்

இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் கூறும்போது, "ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பலில் மிக்-29 கே போர் விமானத்தை முதல் முறையாக தரையிறக்கி சாதித்திருப்பது வரலாற்றில் மற்றொரு மைல் கல் ஆகும்" என தெரிவித்துள்ளார்.


Next Story