இந்திய ஆக்கி வீரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மறுத்த இன்ஸ்பெக்டர் - கோர்ட்டு அதிரடி உத்தரவு
திருமணமான 10 நாட்களில் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
புவனேஷ்வர்,
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா (வயது 32). இவர் ஒடிசா காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். பிரேந்திர லெஹ்ராவின் நண்பன் ஆனந்த் டாப்போ (வயது 28).
புவனேஷ்வர் மாவட்டம் இன்போ சிட்டி பகுதியில் ஆனந்த் டாப்போ வசித்து வந்தார். திருமணமாகி 10 நாட்கள் ஆன நிலையில் ஆனந்த் டாப்போ கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரேந்திர லெஹ்ரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தனது மகனின் சந்தேகம் இருப்பதாக ஆனந்த் டாப்போவின் தந்தை குற்றஞ்சாட்டினார். தனது மகனை பிரேந்திர லெஹ்ரா மற்றும் அவரது பெண் தோழி மஞ்சத் டிடியுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாகவும், மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் ஆனந்தின் தந்தை பந்தனா குற்றஞ்சாட்டினார். மேலும், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்றும் இந்த சம்பவத்தில் பிரேந்திர லெஹ்ரா மீது சந்தேகம் இருப்பதாகவும் இன்போ சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் பிரேந்திர லெஹ்ரா மீது இன்போ சிட்டி போலீஸ் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. இன்போ சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் பிரேந்திர லெஹ்ரா மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வந்தார்.
இதையடுத்து, மகன் மரணத்தில் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யும்படியும், இன்போ சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆனந்தின் தந்தை பந்தனா ஒடிசா ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஒடிசா ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுத்த பின்னர் பல மாத போராட்டத்திற்கு பின் கடந்த நவம்பர் 24-ம் தேதி ஆனந்த் மரண வழக்கில் பிரேந்திர லெஹ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆனந்த் மரணத்தில் முன்னாள் ஆக்கி வீரர் பிரேந்திர லெஹ்ரா மீது வழக்குப்பதிவு செய்யாமல் பணியில் காலம் தாழ்த்திய இன்போ சிட்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் 1 ஆண்டு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது என கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், இன்போ சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு மாதம் பயிற்சி வகுப்பிற்கு செல்லும்படியும் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
ஆனந்த் மரண வழக்கு விசாரணையை புவனேஷ்வர் துணை கமிஷனர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.