ஓட்டல் அதிபரை கடத்தி கொடூர கொலை; உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீச்சு


ஓட்டல் அதிபரை கடத்தி கொடூர கொலை; உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீச்சு
x

ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலக்காடு,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (வயது 58). இவருக்கு சொந்தமான ஓட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீெரன சித்திக் மாயமானார். இதனால், அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சித்திக்கின் மகன், கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சித்திக் தொடர்பான விவரங்கள், ஆவணங்களை போலீசார் சோதனை செய்தபோது அவரது ஏ.டி.எம். கார்டு காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்திக்கின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தனர். அதில் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து பெரிய அளவில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துண்டு, துண்டாக...

இதனால் சித்திக் பணத்திற்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகளி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ் ஒன்று திறந்து கிடந்தது. அதில் ஆண் ஒருவர் வெட்டப்பட்டு உடல் துண்டு துண்டாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு இதுபற்றி உடனடியாக அகளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அகளி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில், உடல் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பது மாயமான ஓட்டல் அதிபர் சித்திக் என்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் விசாரணை

ஆனால் அவரை கொன்றது யார், என்ன காரணத்திற்காக கொன்றனர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து கோழிக்கோடு, அகளி, மலப்புரம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சித்திக்கின் ஓட்டலில் வேலை செய்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரை சேர்ந்த சிபில் (36) மற்றும் பர்ஹானா (34) ஆகியோர் மாயமானதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவர்கள் 2 பேரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஓட்டல் அதிபர் சித்திக்கை வெட்டி கொன்றதாகவும், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் போட்டுவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து பாலக்காடு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'வேலையை விட்டு நீக்கியதால் கொன்றோம்' - கைதான பெண் உள்பட 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் கைதான 2 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

சித்திக்கின் ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தோம். ஆனால் கடந்த 18-ந்தேதி சித்திக், எங்கள் 2 பேரையும் வேலையில் இருந்து திடீரென நீக்கி வேலை பார்த்த வரையிலான சம்பளத்தை தந்துவிட்டார். இந்த கோபத்திலும், அவரிடம் இருந்து பணம் பறிக்கவும் கடந்த 23-ந்தேதி சித்திக்கை அவரது சொந்த காரிலேயே கடத்தி கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் அங்கு வைத்து அவரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து அடைத்தோம். பின்னர் காரில் சென்று அட்டப்பாடி அகளி வனப்பகுதியில் வீசி சென்றதாக தெரிவித்தனர். இவர்களுக்கு உடந்தையாக பர்ஹானாவின் தம்பி ஆஷிக்கும் இருந்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story