என் அனுமதி இன்றி எப்படி...? ஆபரேசன் தியேட்டரில் மருத்துவர்கள் மோதல்; படுக்கையில் நோயாளிக்கு திக்.. திக்..


என் அனுமதி இன்றி எப்படி...? ஆபரேசன் தியேட்டரில் மருத்துவர்கள் மோதல்; படுக்கையில் நோயாளிக்கு திக்.. திக்..
x

கோப்பு படம்

ஆபரேசன் தியேட்டர் படுக்கையில் நோயாளியை வைத்து கொண்டு, என் அனுமதி இல்லாமல் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என இரு மருத்துவர்கள் மோதி கொண்டுள்ளனர்.



பாராமுல்லா,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பட்டான் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் டுபாயில். இவருக்கு மேலதிகாரியாக டாக்டர்இம்தியாஸ் இட்டூ பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், எந்தவொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றாலும், தன்னிடம் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும் என இம்தியாஸ் கூறி வந்து உள்ளார்.

ஆனால், ஏழை நோயாளி ஒருவருக்கு அவசர சர்ஜரி செய்ய வேண்டிய நிலையில், டாக்டர் டுபாயில் அதற்காக சென்றுள்ளார். ஆபரேசன் தியேட்டரில் நோயாளி படுக்கையில் தயாராக இருந்து உள்ளார்.

அந்த நேரத்தில் வந்த டாக்டர் இம்தியாஸ், எனது அனுமதி இல்லாமல் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடியும்? என கேட்டு டுபாயிலை திட்டியுள்ளார். நோயாளிக்கும் திட்டு விழுந்து உள்ளது.

இவர்களுக்கு இடையே நடந்த இந்த வாக்குவாதத்திற்கு இடையே, படுக்கையில் இருந்த நோயாளி அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு அமைதியாக இருந்து உள்ளார். இதன்பின் பாராமுல்லா தலைமை மருத்துவ அதிகாரிக்கு, சம்பவம் பற்றி டுபாயில் புகார் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பஷீர் அகமது கூறும்போது, தனது சக பணியாளர் ஒருவர் மீது டாக்டர் அளித்த புகார் ஒன்று எனக்கு வந்து உள்ளது. அதுபற்றி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருக்கு பட்டான் நகர மருத்துவ அதிகாரியான பெண் டாக்டர் மஸ்தூரா அறிக்கை அளித்து உள்ளார். அதில், இருவரும் சக பணியாளர்கள். சிறிது நேரம் கழித்து நிலைமை சீராகி இருக்கும் என நினைக்கிறேன். இது ஒன்றும் அவ்வளவு பெரிய விசயம் எல்லாம் இல்லை என தெரிவித்து உள்ளார்.

எனினும், அப்பகுதி மக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்கள் சண்டையில் ஒரு டாக்டர் கோபித்து கொண்டு அடுத்த நாள் பணிக்கு வரவில்லை. இதனால், நாங்கள் சென்று விட்டு சிகிச்சை பெறாமல் திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

அர்ப்பணிப்புடன் கூடிய உன்னதம் நிறைந்த மருத்துவ தொழிலில் உள்ள இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்து உள்ளனர்.


Next Story