ஐதராபாத்; ஸ்ரீ ஹனுமான் கோவிலில் தூய்மை பணியினை மேற்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
ஐதராபாத்,
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
அந்தவகையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமான் திருக்கோவிலில் தூய்மை பணிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
அயோத்தியில், வரும் 22-ம் தேதி ஶ்ரீராமரின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமான் திருக்கோவிலில் தூய்மை பணியினை மேற்கொண்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.