140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக திருப்பதி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் - பிரதமர் மோடி


தினத்தந்தி 27 Nov 2023 3:50 AM GMT (Updated: 27 Nov 2023 5:05 AM GMT)

இன்று காலையில் பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதி,

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 7.40 மணிக்கு திருப்பதி வந்தார். ரேணிகுண்டா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலையில் பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். காலை 8 மணியளவில் கோவிலுக்கு வந்த அவரை, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சாமி கோவிலில், 140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார்.


Next Story
  • chat