'நான் போஸ்டர் ஒட்டுகிறேன், என்னை கைது செய்யுங்கள்'; சித்தராமையா சவால்


நான் போஸ்டர் ஒட்டுகிறேன், என்னை கைது செய்யுங்கள்; சித்தராமையா சவால்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

‘நான் போஸ்டர் ஒட்டுகிறேன், என்னை கைது செய்யுங்கள்’ என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வெற்றியின் ரகசியம்

கர்நாடகத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இங்கு லஞ்சம் வாங்கினால் தவறு இல்லை, லஞ்சம் வாங்கியவர்கள் குறித்து பேசினால் குற்றம். போலீசார் மூலம் எத்தனை பேரின் வாயை மூட முடியும். எவ்வளவு பேரை சிறையில் அடைக்க முடியும். கர்நாடக பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து நானே போஸ்டர் ஒட்டுகிறேன், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்.

நான் மற்றும் டி.கே.சிவக்குமார் குறித்து அவதூறாக பா.ஜனதாவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த விஷயத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மவுனமாக இருப்பது ஏன்?. போலீசாரின் கண்களுக்கு இது தெரியவில்லையா?. பொய் தகவல்களை கொண்டு பிரசாரம் செய்வது, எதிர்க்கட்சி தலைவர்களின் புகழை கெடுப்பது, தனிமனித கருத்து சுதந்திரத்தை பறிப்பது ஆகியவை தான் பா.ஜனதா வெற்றியின் ரகசியம்.

தனிமனித சுதந்திரம்

சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவினர் தவறான தகவல்களை பரப்புவதில் உலகிலேயே முதன்மையானவர்கள்.நான் முதல்-மந்திரியாக இருந்தபோதும், எனக்கு எதிராக இத்தகைய அவதூறு பிரசாரங்களை பா.ஜனதா செய்தது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடவில்லை. நான் தனிமனித சுதந்திரத்தை மதித்தேன்.

அரசியலில் இத்தகைய விமர்சனங்கள் சகஜமானது. ஆனால் இந்த விவகாரத்தை அடிமட்டத்திற்கு கொண்டு வந்த பெருமை பா.ஜனதா கட்சியையே சாரும். வேறு தலைவர்களை இவ்வாறு அவதூறாக கருத்துகளை வெளியிடும்போது முதல்-மந்திரி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கே இந்த நிலை வரும்போது மட்டும் வருத்தம் ஏற்படுகிறதா?.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.


Next Story