எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிப்பேன்; பிரதமரிடம் உறுதி கூறிய நிதிஷ் குமார்


எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிப்பேன்; பிரதமரிடம் உறுதி கூறிய நிதிஷ் குமார்
x

பீகார் மக்கள் பொருளாதார ரீதியாக அதிக அதிகாரம் படைத்தவர்களாக இப்போது உணர்வார்கள் என்று முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசியுள்ளார்.

அவுரங்காபாத்,

பீகாரில் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரூ.21,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, வரவுள்ள மக்களவை தேர்தலில், 400-க்கும் கூடுதலான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியானது, வெற்றி பெறும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே இனி எப்போதும் தொடர்ந்து நீடிப்பேன் என பிரதமருக்கு இப்போது உறுதி கூறுகிறேன் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, பீகாரில் உங்களை (பிரதமர் மோடியை) நான் வரவேற்கிறேன். பீகாரில் நிறைய வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இனி விசயங்கள் விரைவாக நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பீகார் புதிய வளர்ச்சிக்கான உயரங்களை அடையும். பீகார் மக்கள் பொருளாதார ரீதியாக அதிக அதிகாரம் படைத்தவர்களாக இப்போது உணர்வார்கள் என்று பேசியுள்ளார்.

பீகாரின் முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியுடனான உறவை முறித்து அதில் இருந்து விலகினார். பின்னர், தன்னுடைய பழைய நட்பு கட்சியான பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணியை புதுப்பித்து கொண்டார். முதல்-மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பின்னர் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக ஆனார்.

1 More update

Next Story