அக்னிபத் திட்டம்: ஜூன் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - விமானப்படை அறிவிப்பு


அக்னிபத் திட்டம்: ஜூன் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - விமானப்படை அறிவிப்பு
x

அக்னிபத் திட்டத்தின்கீழ், ஜூலை 24ம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் என விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு நீடிக்கிறது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்தவகையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, வெடிபொருள் பரிசோதகர்) கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைப்போல கடற்படை மற்றும் விமானப்படையில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்புகள் முறையே இன்றும் (செவ்வாய்க்கிழமை), 24-ந்தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின்கீழ், ஜூலை 24ம் தேதியில் இருந்து ஆன்லைன் தேர்வு நடைபெறும் என விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர விரும்புவோர், வரும் 24ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விரும்புவோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணைக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.250-ஐ செலுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர 1999,29 டிசம்பர் முதல் 2005ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story