பாரத் ஜோடோ யாத்திரையைக் கண்டு பாஜக கலக்கம் அடைந்துள்ளது: காங்.தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே


பாரத் ஜோடோ யாத்திரையைக் கண்டு பாஜக கலக்கம் அடைந்துள்ளது: காங்.தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே
x

ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமை யாத்திரை பொதுமக்களிடம் நல்லதொரு ஆதரவைப் பெற்று வருகிறது. அதுதான் பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்துள்ளது என்று கார்கே கூறினார்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி, மும்பையில் தொடங்கப்பட்டதாகும். இந்த கட்சி தொடங்கப்பட்டு 137 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 138-வது நிறுவன தினத்தை நேற்று உற்சாகமாக கொண்டாடியது. டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கட்சி கொடியை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றினார். இந்த விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அம்பிகா சோனி, வேணுகோபால், பவன் பன்சால் மற்றும் வழிகாட்டும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசும்போது கார்கே கூறியதாவது:-

1885-ம் ஆண்டு இதே நாளில் காங்கிரஸ் கட்சி மும்பையில் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 137 ஆண்டுகள் கடந்து விட்டன. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், காங்கிரசின் முத்திரையைப் பார்க்கக்கூடிய பல மைல்கற்களை நாடு கொண்டிருக்கிறது.

இந்தியா வெற்றிகரமான, வலிமையான ஜனநாயகமாக மட்டும் உருவாகிவிடவில்லை. கடந்த சில பத்தாண்டு காலகட்டத்தில் அது பொருளாதாரம், அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் வல்லரசாக மாறி உள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சேவைத்துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகி உள்ளது.

இது சுயமாய் நடந்துவிடவில்லை. அது ஜனநாயகத்தின் மீதான காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையினாலும், அனைவரையும் உள்ளடக்கி உடன் அழைத்துச்சென்றதாலும், அனைவருக்கும் சம உரிமைகளும், வாய்ப்புகளும் தருகிற அரசியல் சாசனத்தின் மீது வைத்துள்ள முழுமையான நம்பிக்கையினாலும்தான் இது நடந்துள்ளது.

இந்தியாவின் அஸ்திவாரங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. வெறுப்புணர்வால் சமூகம் பிளவுபடுத்தப்படுகிறது. மக்கள் விலைவாசி உயர்வினாலும், வேலையில்லா திண்டாட்டத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு அதுபற்றி கவலைப்படவில்லை.ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமை யாத்திரை பொதுமக்களிடம் நல்லதொரு ஆதரவைப் பெற்று வருகிறது. அதுதான் பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்துள்ளது.நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த யாத்திரையில் சேர வேண்டும் என்று அழைக்கிறேன். நாங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.மும்பையில் நடந்த விழாவிலும் காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்து கொண்டார்.

கார்கே, ராகுல் டுவிட்டர் பதிவு

காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "காங்கிரஸ் கட்சியை அனைவரையும் உள்ளடக்கியதாக்குவோம். இளைஞர்கள், பெண்கள், விளிம்பு நிலை பிரிவினர், அறிவு ஜீவிகள் என அனைவரையும் கட்சியில் தொடர்புபடுத்துவோம். அவர்களோடு சேர்ந்து விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வெறுப்புணர்வுக்கு எதிராக போராடுவோம்" என கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தையொட்டி ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "எல்லாச்சூழ்நிலைகளிலும் சத்தியம், அகிம்சை, போராடும் குணம் ஆகியவற்றைப் பாதையாகக் கொண்டு, ஒவ்வொரு அடியையும் பொதுநலனை அடிப்படையாக கொண்டு எடுத்து வைக்கிற அமைப்பில் (காங்கிரசில்) நானும் அங்கம் வகிக்கிறேன் என்பதற்காக பெருமைப்படுகிறேன்" என கூறி உள்ளார்.


Next Story