பாஜகவின் கொள்கைகள் நாட்டை பிளவுப்படுத்துகின்றன - ராகுல் காந்தி


பாஜகவின் கொள்கைகள் நாட்டை பிளவுப்படுத்துகின்றன - ராகுல் காந்தி
x

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் நாட்டை பிளவுப்படுத்துகின்றன என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார்.

பல்லாரி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதில் அவர் பேசுகையில், கர்நாடகாவில் நடைபெற்று வரும் பாஜக அரசு "பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரானது. மேலும், இங்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

கர்நாடாகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி "40 சதவீத கமிஷன்" அரசு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் எந்த வேலையையும் பணம் செலுத்துவதன் மூலம் இங்கு செய்யலாம். கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? இங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக ஆக வேண்டுமானால் ரூ. 80 லட்சம் செலுத்தி போலீஸ் ஆகலாம். காசு இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம். பணம் இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்க வேண்டும்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எல்லாம் எங்கே போனது? அவர் கூறியதற்கு மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் நாட்டை பிளவுப்படுத்துவதாக ஆயிரக்கணக்கான மக்கள் கருதுகின்றனர். எனவே இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ யாத்திரை' என்று பெயர் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story