நாட்டுக்காக எனது ரத்தம் சிந்தப்பட்டால், நான் அதிர்ஷ்டசாலி - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு


நாட்டுக்காக எனது ரத்தம் சிந்தப்பட்டால், நான் அதிர்ஷ்டசாலி - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
x

நாட்டுக்காக எனது ரத்தம் சிந்தப்பட்டால், நான் அதிர்ஷ்டசாலி தான் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

நாட்டில், 1,300 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. அவற்றில், பா.ஜனதா, காங்கிரஸ், ஆம்ஆத்மி என 3 கட்சிகள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன. 10 ஆண்டுகள் என்னும் குறுகிய காலத்தில் கிடைத்திருப்பது, அற்புதமான, நம்ப முடியாத சாதனை. இத்துடன் நமக்கு பொறுப்பு கூடியிருக்கிறது. இதற்காக பாடுபட்ட கட்சியினர் அனைவருக்கும் நன்றி.

நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க விரும்பும் அனைத்து தேசவிரோத சக்திகளும் ஆம்ஆத்மிக்கு எதிராக உள்ளனர். ஆனால் கடவுள் நம்முடன் இருக்கிறார். கடவுள், இந்த நாட்டுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். இந்தியாவை உலகத்தின் முதன்மை நாடாக ஆக்க பொதுமக்கள் ஆம்ஆத்மியில் சேர வேண்டும்.

நாட்டுக்காக எனது ரத்தம் சிந்தப்பட்டால், நான் அதிர்ஷ்டசாலி. கட்சியினர், தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும். சிறைக்கு செல்வது பற்றி பயப்படுபவர்கள், கட்சியை விட்டு விலகி விடலாம். தீவிர நேர்மை, தேசபக்தி, மனிதநேயம் என்ற 3 தூண்களின் மீது ஆம்ஆத்மியின் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது.

ஆம்ஆத்மி மீதான கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு, இப்போது நம்பிக்கையாக மாறிவிட்டது. கடவுள் ஆசியுடன் அதை நிறைவேற்றுவோம். இந்திய அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வருவதில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. நம்மை பார்த்துத்தான், மற்ற கட்சிகளும் இலவச மின்சாரம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கத் தொடங்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story