எங்களை சந்திக்க பிரதமர் நேரம் தரவில்லை என்றால்... மம்தா பானர்ஜி அதிரடி பேட்டி


எங்களை சந்திக்க பிரதமர் நேரம் தரவில்லை என்றால்... மம்தா பானர்ஜி அதிரடி பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2023 3:52 PM IST (Updated: 9 Dec 2023 4:05 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தின் கீழ், முன்பே மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிதியானது மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

டார்ஜிலிங்,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இதன்படி, வருகிற 17-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். இதுபற்றி டார்ஜிலிங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நான் டெல்லியில் இருப்பேன்.

இந்த நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் பிரதமரை சந்திப்பதற்காக அவரிடம் தேதி கேட்டிருக்கிறேன். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிப்பதற்காக, சில எம்.பி.க்களுடன் சென்று அவரை சந்திக்க விரும்புகிறேன் என வேண்டுகோளில் தெரிவித்து உள்ளேன் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ், முன்பே மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிதியானது மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.

பிற மாநிலங்கள் பணம் பெற்று கொண்டிருக்கும்போது, மேற்கு வங்காளத்திற்கான நிதியானது விடுவிக்கப்படாமல் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது? அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையையும் கொடுக்கவில்லை.

வீடுகள், சாலைகள், சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளுக்கான எங்களுடைய பங்கையும் அவர்கள் நிறுத்தி விட்டனர். அவர்களுடைய பணம் மீது எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், எங்களுடைய பங்கு வேண்டும். அதனாலேயே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த நாட்களுக்குள் எங்களை சந்திக்க பிரதமர் நேரம் தரவில்லை எனில், என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம் என்று மிரட்டலாகவும் கூறியுள்ளார்.


Next Story