சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் குறித்த வழக்கு- கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத வழிபாட்டு தலங்களை குறித்த வழக்கில் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
கர்நாடகத்தில் ஏராளமான வழிபாட்டு தலங்கள் பொது இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதாவது கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பொது இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருக்கும் வழிபாட்டு தலங்களை காலி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி இந்த பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகத்தில் பொது இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருக்கும் வழிபாட்டு தலங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினர். மேலும் இதுபற்றி இன்னும் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.