130 கோடி மக்களின் சேவகன் நான் - பிரதமர் மோடி
2014-க்கு முன் இருந்ததை விட தற்போது நமது நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிம்லா,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நேற்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நேற்று முதல் வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கான 11-வது நிதி தவணை திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பல திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைநகரங்களில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்ற பொதுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டின் எல்லைகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததை விட தற்போது பாதுகாப்பாக உள்ளன. பல்வேறு திட்டங்களில் பயனாளர்களில் போலியாக இருந்த 9 கோடி பெயர்களை நாங்கள் நீக்கியுள்ளோம். நாடு முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் நான் என்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும் தான் பிரதமர் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. ஆனால், கோப்புகள் சென்ற உடன் நான் பிரதமராக கிடையாது. எனது வாழ்க்கையின் எல்லாமான 130 கோடி மக்களின் முதன்மை சேவகன் நான். எனது வாழ்க்கை உங்களுக்கு தான்' என்றார்.