மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்: சரத்பவார் கட்சி உடைந்தது - துணை முதல்-மந்திரி ஆனார் அஜித்பவார்


மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்: சரத்பவார் கட்சி உடைந்தது - துணை முதல்-மந்திரி ஆனார் அஜித்பவார்
x

சரத்பவார் கட்சியை சேர்ந்த அஜித்பவார் 36 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா அணிக்கு தாவினார். உடனடியாக துணை முதல்-மந்திரியாகவும் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

மும்பை,

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வருகின்றன.

அந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க தயாராக இருந்த நிலையில் முதல்-மந்திரி பதவி விவகாரத் தில் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணி உடைந்தது.

பா.ஜனதா கூட்டணி அரசு

அப்போதைய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனது இந்துத்வா கொள்கைக்கு முரணான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த அரசு சுமார் 2½ ஆண்டு காலம் நீடித்து வந்த நிலையில், சிவசேனாவை அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 2 ஆக உடைத்தார். அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார்.

இதன் மூலம் மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பா.ஜனதா அரசு மலர்ந்தது. ஏக்நாத் ஷிண்டே ஓராண்டு காலமாக அரசை நடத்தி வருகிறார்.

திடீர் அரசியல் பூகம்பம்

இந்தநிலையில் நேற்று மராட்டியத்தில் திடீரென மற்றொரு அரசியல் பூகம்பம் வெடித்தது.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று காலை மும்பையில் உள்ள தனது 'தேவ்கிரி' அரசு பங்களாவில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை அவசரமாக அழைத்து பேசினார். தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கூட்டத்தில் 35 முதல் 40 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

ஏற்கனவே பலமுறை அஜித்பவார் தனது கட்சி தலைவர்கள், எம்.எல். ஏ.க்களை தனது இல்லத்துக்கு அழைத்து பேசியிருந்ததால் அந்த கூட்டத்தை ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தது.

சரத்பவார் மகள்

இதேபோல மும்பையில் நடைபெறும் கூட்டம் பற்றி தனக்கு தெரியாது, எதிர்க்கட்சி தலைவராக அஜித்பவார் கட்சி தலைவர்கள், எம்.எல். ஏ.க்களை அழைத்து பேசலாம் என கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரும் தெரிவித்தார்.

அஜித்பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் சரத்பவாரின் மகளும், செயல் தலைவருமான சுப்ரியா சுலே, மூத்த தலைவர் சகன் புஜ்பால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சுப்ரியா சுலே திடீரென கூட்டத்தில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார்.

ராஜ்பவன் விரைந்த அஜித்பவார்

இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அஜித்பவார் தனது ஆதரவாளர்கள் சிலருடன் ராஜ்பவன் விரைந்தார். அங்கு அவர்கள் கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்தனர். அப்போது அஜித்பவார், மராட்டியத்தில் நடந்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பா.ஜனதா அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றார். இதனால் அரசியல் களம் பரபரப்பானது.

அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்தியில் ராஜ்பவனில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.

துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பு

பின்னர் அஜித்பவார் தனது கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர் சகன் புஜ்பால் ஆகியோருடன் ராஜ் பவன் வந்தார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் ராஜ்பவனுக்கு வந்தனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் பிற்பகல் 2.30 மணி அளவில் பதவி ஏற்பு விழா அரங்கிற்கு கவர்னர் ரமேஷ் பயஸ் வந்தார். உடனடியாக பதவி ஏற்பு விழா தொடங்கியது.

அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் அவருக்கு கவர்னர் ரமேஷ் பயஸ் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

8 மந்திரிகள்

அஜித்பவாரை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், ஹசன் முஸ்ரிப், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே, தர்மராவ் அட்ரம், அனில் பாட்டீல், சஞ்சய் பன்சோடே ஆகிய 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு விழாவில் தேசியவாத காங்கிரசின் இரு செயல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் படேல், மேலும் அந்த கட்சியை சேர்ந்த துணை சபாநாயகர் நர்காரி ஷிர்வால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேயில் இருந்தார். அவரது மகளும், கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே விழாவில் கலந்து கொள்ளவில்லை.

36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

பதவி ஏற்பை தொடர்ந்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களிடம் கூறுகையில், "நாடு மற்றும் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசில் இணைய விரும்பினர். அதன்படி இணைந்துள்ளோம். வருகிற தேர்தலை எங்களது கட்சி சின்னத்தில் தான் சந்திப்போம். கட்சி உடையவில்லை" என்றார்.

அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரசின் 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சி பிளவுபட்டுள்ளது.

பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், "சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரசை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்" என்றார்.

மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார், "இந்துத்வாவை பாதுகாக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுத்தார். இன்று தேசியவாத காங்கிரசில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவார் தலைமையில் ஜனநாயக வழியில் ஏக்நாத் ஷிண்டே-தேவேந்திர பட்னாவிஸ் அரசில் இணைந்து மோடிக்கு ஆதரவு கொடுத்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

முதல்-மந்திரி ஷிண்டே கருத்து

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "இரட்டை என்ஜின் (சிவசேனா-பா.ஜனதா) அரசாங்கத்தில் 3-வது என்ஜின் இணைந்து உள்ளது. இப்போது 2 துணை முதல்-மந்திரிகள் உள்ளனர். இது மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும்" என்றார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு இறுதியில் மராட்டிய சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி பலம் ஓங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story