தனிப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள்


தனிப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள்
x
தினத்தந்தி 20 Feb 2023 5:20 PM IST (Updated: 20 Feb 2023 5:20 PM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது தனிப்பட்ட புகைப்படங்களை ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காதி மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மடுஹில். அதேபோல், கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி.

இதனிடையே, 2021-ம் ஆண்டு மைசூரில் கலெக்டராக பணியாற்றி வந்த ரோகிணி சிந்தூரிக்கும் மதச்சார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ. மகேஷுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. ஊழல் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக மகேஷ் மீது ரோகிணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், மகேஷ் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என தெரியவந்தது. அதேவேளை, மைசூரு கலெக்டராக இருந்தபோது ரோகிணி அரசு கட்டிடத்தில் விதிகளை மீறி நீச்சல்குளம் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகேஷ் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி மீது சட்டசபையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எம்.எல்.ஏ. மகேஷ் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணியும் தனியார் ஓட்டலில் சந்தித்து பேசிய புகைப்படம் வைரலானது. இந்த விவகாரத்தில் இருவரும் சமாதானமாக முயறிப்பதாக தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் ரோகிணி தனது தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்ததாக ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ரோகிணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் ரூபா முன்வைத்துள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் ரோகிணி தனது தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக ரூபா குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதேவேளை, ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரோகிணி கூறுகையில், ரூபா எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்க எனது புகைப்படங்களை எனது சமூகவலைதள பக்கங்கள், வாட்ஸ்-அப் ஸ்டேட்டர் மூலம் சேகரித்துள்ளார். அவரது புகைப்படங்களை ஆண் அதிகாரிகளுக்கு நான் அனுப்பியதாக ரூபா கூறுகிறார். நான் யாருக்கு அனுப்பினேன் அவர்களின் பெயர்களை கூறுப்படி ரூபாவிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

மேலும், ஐபிஎஸ் அதிகாரி ரூபா மனநல பிரச்சினையில் இருப்பதாக ரோகிணி ஐஏஎஸ் கூறியுள்ளார். பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள் தனிப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இருவரும் ஒழுங்கீனமாக செயல்பட்டால் அரசு பார்த்துக்கொண்டிருக்காது, நடவடிக்கை எடுக்கும் என்று கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள் சமூகவலைதளத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story