பெங்களூருவில், 243 நம்ம 'கிளினிக்'குகள் அடுத்த மாதம் தொடக்கம்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
பெங்களூருவில், 243 நம்ம ‘கிளினிக்'குகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில், 243 நம்ம 'கிளினிக்'குகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
நம்ம 'கிளினிக்'குகள்
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் பசவ தாமா பூங்கா, அம்பேத்கர் சமுதாய கூடம், பாலகங்காதரநாத சுவாமி பூங்கா, போவி பாளையா மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு இந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், வீட்டு உரிமை பத்திரம் வழங்கியும் பேசியதாவது:-
பெங்களூருவில் 243 நம்ம கிளினிக்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த கிளினிக்குகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஒரு புனிதமான திட்டம் ஆகும். பெங்களூருவில் கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
போக்குவரத்து நெரிசல்
அம்ருத் திட்டத்தின் கீழ் பெங்களூருவில் 75 பூங்காக்கள் மேம்படுத்தப்படுகிறது. புதிதாக 20 பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. பெங்களூருவின் முழுமையான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. துமகூரு ரோடு மற்றும் மைசூரு ரோட்டை இணைக்க 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்படுகின்றன. இதனால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும்.
பெங்களூரு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு 1.30 கோடி பேர் வசிக்கிறார்கள். அதற்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொழில்களின் வளர்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள்
நகரத்தோனா திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெங்களூருவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1,600 கோடி செலவில் 400 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்களை மேம்படுத்துகிறோம். பெங்களூருவின் புறநகர் பகுதிகளை இணைக்கும் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2023) தொடங்கப்படும். ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்லான புறநகர் ரெயில் திட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர இன்னும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ளும்போது தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் கலால்துறை மந்திரி கோபாலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.