குடகில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 61 வழக்குகள் பதிவு


குடகில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக  61 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடகில் கடந்த 7 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தெரிவித்துள்ளார்.

குடகு-

குடகில் கடந்த 7 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தெரிவித்துள்ளார்.

61 வழக்குகள் பதிவு

குடகு மாவட்ட நிர்வாகம், போலீஸ், கலால் துறை, கன்னடம் மற்றும் கலாசாரம், சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் அரசு கல்லூரியில் போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

குடகு மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக 157 பேர் மீது 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 இடங்களில் கஞ்சா பயிரிட்டது கண்டுப்பிடிக்கப்பட்டு, அவை அழிக்கப்பட்டுள்ளது. 99 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்போன்

மாணவ-மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். மது அல்லது போதைப்பொருட்களுக்கு அடிமையாக கூடாது. கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். மது மற்றும் போதைப்பொருளால் நோய் ஏற்பட்டு குடும்பத்திலும், சமூகத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். போதைப்பொருள் தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதும் போதை தான். இரவில் அதிக நேரம் செல்போன் பார்ப்பது பல்வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே மாணவ-மாணவிகள் எந்தவித போதைக்கும் அடிமையாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story